சுற்றுலா வருவதற்கு சிறந்த இடம் யாழ். குடாநாடு; ஒஸ்திரியா தூதுவர்

asththereeyaயாழ். குடாநாடு, சுற்றுலா தளத்திற்கு பொருத்தமான அழகாக காட்சியளிப்பதுடன், பயணிகளை கவரும் வகையில் திகழ்கின்றது. அந்த வகையில் சுற்றுலா அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என இலங்கை மற்றும் இந்தியாவுக்கான ஒஸ்திரியா நாட்டின் தூதுவர் றைமுன் மயிஸ் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். அரச அதிபருடன் நேற்று மதியம் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘யாழ். குடாநாட்டில் சுற்றுலாவினை அபிவிருத்தி செய்யும் முகமாக, எதிர்வரும் காலங்களில், வெளிநாட்டு ஊக்குவிப்பாளர்களின் வருகையினை அதிகரிக்கும் நோக்கத்துடன், சுற்றுலா தளங்களை விருத்தி செய்ய வேண்டும். எனவே சுற்றுலா துறையினரை இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக ஏனைய நாடுகளிடம் கலந்துரையாடுவதாகவும்’ அவர் இதன்போது கூறினார்.

இந்த கலந்துரையாடலின் போது, இந்திய வேலைத்திட்டங்களான வீட்டுத் திட்டம், அபிவிருத்தி, மிதிவெடி அகற்றல், மொழிகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளதுடன், அரச அதிபரினால் அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர், ‘சமூக ஒருமைப்பாடு அமைச்சினால் மொழி தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மும்மொழி கொள்கைகளை அறிமுகப்படுத்தியள்ளதுடன், மொழிச் சங்கங்கள் நிறுவி கிராம மட்டங்களில் மும்மொழி கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பேருந்து மற்றும் பொது இடங்களில் மும்மொழிகளில் பதாதைகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் மிதிவெடி அகற்றுவது கடினமாக இருப்பதால் அதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது’ என்று விளக்கமளித்தார்.