சுரேஸ் பிரேமசந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்!! தமிழரசு கட்சி அழைப்பு

தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”காலாகலமாக அரசியலைத் தமது கைகளில் கொண்டுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் எமது உரிமைகள் சார்ந்த விடயத்தை கொண்டு செல்லும் மிகப்பெரிய சவால்மிக்க செயற்பாட்டில் நாம் இறங்கியுள்ளோம். அதற்கு எமது தலைவர்கள் அனுசரணையும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

தென்னகத்தில் எமது உரிமை கோரிக்கை தொடர்பில் பல்வேறு விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபோது, வடக்கு கிழக்கிலே நாங்கள் குதர்க்கம் பேசிக் கொண்டிருப்பது எமது சமுதாயத்திற்குரிய அனுகூலமான விடயம் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போது இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய வியூகத்துக்குள் இருந்து வெற்றி காண்கின்ற செயற்பாட்டில் எமது தலைமை மிகக் கவனமாக நிதானமாக ஒரு தூய்மையான பணியை முன்னெடுத்து வருகிறது.

அந்தச் செயற்பாட்டிற்கு ஒத்துழைக்குமாறு சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.

Related Posts