சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.தங்களுடைய தீர்மானங்கள் தொடர்பில் சங்கத் தலைவருக்கும் பணிப்பாளர் சபைக்கும் அறிவித்துள்ளார்கள்.
சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே ஊழியர்கள் ஏகமனதாக இம்முடிவை எடுத்ததுடன், இம்முடிவு தொடர்பில் யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளருக்கும் அறிவித்துள்ளனர்.
சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கடமையாற்றிய பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தொழிலிலிருந்து நீங்கியுள்ள நிலையில், தற்போது சுமார் 45 இற்கு உட்பட்ட ஊழியர்களே சங்கத்தில் கடமையாற்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாமை, சம்பள உயர்வு மேற்கொள்ளப்படாமை போன்ற காரணங்களை முன்வைத்தே வேலைநிறுத்தத்திற்கான அறிவித்தலை ஊழியர் தொழிற்சங்கம் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட பணிப்பாளர் சபையால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பணிப்பாளர் சபையின் காலம் முடிவடைந்த நிலையிலும் பணிப்பாளர் சபையைக் கலைத்து புதிய பணிப்பாளர் சபையை தெரிவுசெய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக கூட்டுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப்பீடம் மற்றும் கிளைகள் யாவும் பூட்டப்பட்ட நிலையில் இன்று காணப்பட்டது.