வட மாகாண சுகாதார அமைச்சரிடம் இருந்து புனர்வாழ்வு, மகளிர் விவகார துறைகளை தாம் திரும்பப் பெற்றுக்கொண்டமை குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
குறித்த துறைகளை தம்மால் நிர்வகிக்க முடியாத நிலையிலேயே அவை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள செயலாளர் மற்றும் அதிகாரிகள் இந்த துறைகளிலேயே நியமனம் பெற்றுள்ளமையால் அப்பதவிகளை தாம் மீண்டும் பொறுப்பேற்கிறார் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் நிதியம் அமைப்பதற்கான சாத்தியம் உருவாகி இருப்பதால் காணி, மீள்குடியேற்ற அமைச்சுக்கள் தன்னிடமும் புனர்வாழ்வு அமைச்சு இன்னொருவரிடமும் இருப்பது பொருத்தமற்றது. இக்காரணங்களாலேயே இரு அமைச்சுக்களையும் தாம் பொறுப்பேற்கிறார் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இரு துறைகளையும் சுகாதார அமைச்சரிடம் இருந்து தாம் பொறுப்பு ஏற்பது தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை எதுவும் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார அமைச்சரின் கீழ் இருந்து பொறுப்பேற்கப்பட்ட இரு துறைகளும் அவரின் கீழ் இருந்த போது திறம்பட செயற்படவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.