Ad Widget

சீன, நார்வே பிணைக்கைதிகள் படுகொலை

சிரியா, ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நாடுகளுக்கு வருகிற மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை கடத்திச்சென்று, பிணைக்கைதிகளாக வைத்திருந்து, கொலை செய்வதை ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

china-norway

இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பான் ஜிங்குய், நார்வே நாட்டின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டெட் ஆகிய 2 பேரை பிணைக்கைதிகளாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றால் இதற்காக ஒரு பெருந்தொகையை தர வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை விதித்திருந்தனர்.

இந்த நிலையில், இவ்விரு பிணைக்கைதிகளும் இப்போது கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்தியை படங்களுடன் தங்களது ஆங்கில பத்திரிகையான ‘தாபிக்’கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு பிணைக்கைதிகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடந்த காட்சி, அந்த பத்திரிகையில் இடம் பெற்றிருக்கிறது. இது ஐ.எஸ். தீவிரவாதிகள் எத்தகைய கொடூர மனம் படைத்தவர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாகி இருக்கிறது.

பிணைக்கைதிகள் இருவரும் கொல்லப்படுவதற்கு முன்பு கண்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதையும், கொல்லப்பட்டு பிணங்களாகக் காணப்படுவதையும் முழு பக்க அளவில் வெளியிட்டு, “நம்பிக்கையற்ற நாடுகள் மற்றும் அமைப்புகளால் கைவிடப்பட்ட நிலையில் கொல்லப்பட்டனர்” என குறிப்பு வெளியிட்டு உள்ளனர்.

அவர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்று கூறப்படவில்லை. இருப்பினும் அவர்களது தலைகளில் ரத்தம் வழிந்தோடி இருப்பது, துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான அறிகுறி என தகவல்கள் கூறுகின்றன.

இந்த படுகொலைக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கொடூர கொலைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்த படுகொலைக்கு காரணமான ஐ.எஸ். தீவிரவாதிகளை நிச்சயமாக குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவோம்” என்று கூறியது.

நார்வேயும் இந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Posts