சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையினால் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் பிராந்தியக் கிளையினால் தற்கால சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் அரச மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம் பெறவுள்ளதாக பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக்கிளையில் நேற்று மாலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித் ததாவது:
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையினால் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நாளைமறுதினம் வியாழக்கிழமை மு.ப. 9 மணிக்கு, இல.286 பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இ.த.விக்கினராஜா கலந்துகொள்ளவுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்னும் தலைப்பில் கைதும், தடுத்து வைத்தலும் மற்றும் சித்திரவதை எனும் விடயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கே.குருபரனும், சமூக பொருளாதார உரிமைகள் என்னும் தலைப்பில் கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் எனும் விடயம் தொடர்பில் பேராசிரியர் சிவனேசனும், பெண்கள் உரிமைகள் தொடர்பில் வைத்தியர் திருமதி திருமகளும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பில் திருமதி கோசலை மதனும் கருத்துரை வழங்கவுள்ளனர்.
பங்குபற்றுனர்களும் கருத்துக்களை வழங்கும் முகமாக நிகழ்வுகள் ஒழுங்க மைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.