விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில் ,
வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று பகிரங்கமாக விடுதலை புலிகளை நினைவு கூர அழைப்பு விடுகின்றார். ஆனால் இதற்கு எதிராக அரசாங்கம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பதாக கூறியே இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர்.
ஆனால் தற்போது பிரிவினைவாதம் பேசி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.எனவே அரசாங்கம் உடனடியாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் முற்றிலும் இலங்கையில் அழிக்கப்பட்டாலும் , இன்றும் புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே காணப்படுகின்றது.
எனவே அவர்களை நினைவுகூர மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுவது சட்டத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முரணான விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.