சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்!

சிவராத்திரி நாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவ வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்படுகிறது.

இதுதொடர்பில் சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களையும் சிவமங்கையர்களையும் இணைத்து கொள்ளும் வேலைத்திட்டம் முக்கியமாக இக்கால கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு குருதிக்கொடை முகாம்களையும் நலிவுற்ற குடும்பங்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகளும் சைவ அறப்பணி நிதியத்தை வலுப்படுத்தல் , சிவ தீட்சை, சிவலிங்கம் வழங்கல், அறநெறிப் பாடசாலைகளுக்கு உந்து சக்தி அளித்தல் செயற்பாடுகளும் சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தச் சிவ வார கால தொண்டுப் பணிகளில் சிவ தொண்டர்களாக, சிவமங்கையர்களாக உங்களை இணைத்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

10 வயதானோர் மழலைச் சிவதொண்டர்களாகவும் 10 – 18 வயதுடையோர் இளம் சிவதொண்டர்களாகவும் 18 வயதுக்கு மேற்பட்டோர் சிவ தொண்டர்களாகவோ சிவமங்கையர்களாகவோ இணைய முடியும் இவர்கள் குடி, புகைப் பழக்கம் அற்றவர்களாகவும் சமய சமூக ஒழுக்கங்களுக்கு புறம்பாக நடக்காதவர்களாகவும் ஒன்றே குலம் , அன்பே சிவம், என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் தேவார , திருமந்திரங்களை மகுட வாக்காகக் கொண்டு இயங்குதல் வேண்டும்.

புதிய சிவதொண்டர், சிவமங்கையர் உங்கள் ஊர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று உறுதிப்பிரமாணம் ஏற்று சிவலிங்கதாரிகளாக தம்மை சிவ, மக்கள் தொண்டுகளிற்கு இறை சிவனின் அருளாசியுடன் அர்ப்பணிக்க முடியும்.

தங்களையோ பிள்ளைகளையோ இணைக்க விரும்பும் அன்பர்கள் அறியத் தாருங்கள் தொடர்புகட்கு மாவட்ட /பிரதேச இணைப்பாளர்களின் விவரம் அறியத் தரப்படும்.

பொதுத் தொடர்புகட்கு 0702373901 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor