தற்போதைய அரசினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு மாவை சேனாதிராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு ஆதரவு தெரிவிப்பதற்காக இருபது மில்லியன் ரூபாவை மாவை சேனாதிராஜா உட்பட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடியாக மாவை சேனாதிராஜா தனது சட்டத்தரணிகள் மூலம் சிவசக்தி ஆனந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், தவறானதும் உண்மையற்றதுமான குற்றச்சாட்டுக்களைத் தம் மீது சுமத்தியமைக்காக, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நூறு கோடி (ஒரு பில்லியன்) ரூபாவை நட்ட ஈடாகத் தமக்குச் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
அவ்வாறு செலுத்தத் தவறினால் அதை வட்டியுடன் சட்டப்படி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.