சிறுவர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்

சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என கிளிநொச்சி மாவட்ட நன்னடத்தை அதிகாரி ரி.முத்துகுமார் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பாக தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

கிளிநொச்சிப் பகுதியில் 8 வயதுச் சிறுமியை தூக்கி, 14 வயதுச் சிறுவன் மரத்திலிருந்து பழம் பிடுங்குவதற்கு உதவி செய்துள்ளான்.

இதனைக் கண்ட சிலர் சிறுவன் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறி புரளியைப் பரப்பி, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவிற்குச் சென்றுள்ளனர். ஆனால், வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர், சிறுமிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

குறித்த சிறுமியின் பெற்றோர்கள் மீது கொண்ட கோபத்தை, சில தரப்பினர் அவர்களது பிள்ளைகள் மூலம் தீர்க்க முற்பட்டுள்ளனர். சிறுவர்களின் மனதில் நல்ல எண்ணங்களே எப்போதும் இருக்கின்றன. அதனைச் சீரழிக்க வேண்டாம்.
அவர்கள் இப்படியான அவதூறுகளால் மனமுடைந்து போவார்கள். இவற்றினால், சிறுவர்கள் தற்கொலைகளுக்கு முயன்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அண்மையில், பூநகரி பகுதியில் ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இருந்தும் அந்தச் சிறுமி அதிலிருந்து மீண்டு பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்த வேளையில், சிலர், அச்சிறுமியை பாடசாலையில் அடையாளப்படுத்தி, ஒரு விதமாகப் பேசியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி பாடசாலை செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். இதனால் அச்சிறுமியின் எதிர்காலமும் பாழாகிப்போகின்றது.

இதனை ஏற்கமுடியாது. சிறுவர்களின் எதிர்காலம் முக்கியமானது. அவர்களை மனமுடைய வைக்கும் எச்செயற்பாடுகளிலும் யாரும் ஈடுபடாதீர்கள் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.