சிறுமிகளை வன்புணர்ந்த கடற்படைச் சிப்பாய்களை உடன் கைதுசெய்க! – நாடாளுமன்றில் சம்பந்தன்

sampanthan“காரைநகரில் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கடற்படைச் சிப்பாய்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.” – இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.

இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகப்படுத்திய உண்மையான குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவில்லை என்றும் இதன்போது அவர் குற்றம்சாட்டினார்.

காரைநகர் சம்பவம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இராணுவத்தின் செயற்பாடுகளினால் வடக்கு, கிழக்கு பெண்களினதும், சிறார்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பில் இந்தச் சபையில் பேசவேண்டியுள்ளது. யாழ்.காரைநகரில் அண்மையில் 11 வயது சிறுமி ஒருத்தி பாலியல் ரீதியாக பல தடவைகள் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய்களாலேயே இவ்வாறான துஷ்பிரயோகம் நடத்தப்பட்டது என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 10 வயது சிறுமியும் இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது மிகவும் கொடூரமான குற்றம். இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண் டும். வடக்கில் இராணுவமயமாக்கல் பற்றி பல தடவை வலியுறுத்தியிருக்கின்றோம். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் சம்பவம் தொடர்பிலான பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா? உண்மையான குற்றவாளிகளை விடுத்து ஏனையவர்களை அடையாள அணிவகுப்பில் நிறுத்தினால் எவ்வாறு அடையாளம் காணமுடியும்?

இந்தக் கேள்விக்கு அரசு பதிலளித்தே ஆகவேண்டும்” – என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி