சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒரே இனமாக திகழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கம் – டளஸ் அழகப்பெரும

ala_dalas-alka-parumaநடைபெறவுள்ள தேர்தலில் வன்முறை மூலம் வெற்றி அடைய வேண்டிய தேவை எமக்கில்லை. தேர்தலில் நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு இருக்கின்றது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பிரதேசவாத மற்றும் இனவாத சக்திகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என்றும் அவர்; கேட்டுக்கொண்டார்.

யாழ். தொழில்நுட்ப வளாகத்தில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘யாழ்ப்பாணத்தில் வாழும் எனது அன்புக்குரிய நண்பர்களே! உங்கள் தாய்மொழி மூலம் உங்களுடன் உரையாட முடியாததற்கு வெட்கப்படுகின்றேன். கவலைப்படுகின்றேன். இந்த வெட்கத்திற்கு ஆளாக்கியது எனது தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் அல்ல. இந்த நாட்டினை ஆட்சி புரிந்த தலைவர்களே இதற்கு காரணகர்த்தா ஆவர்.

அமைச்சர் டக்ளஸிற்கு சிங்கள மொழியில் பேசத் தெரியாது. அதேபோன்று டளஸிற்கு தமிழில் பேசத் தெரியாது, இதற்கு முன்னாள் தலைவர்கள் செய்த பெரிய தவறே காரணமாகும்.

ஜனாதிபதி தீர்மானித்தபடி எல்லா சிங்களப் பிள்ளைகளுக்கும் தமிழ்மொழியும் எல்லா தமிழ்ப் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியும் கற்றுக் கொடுத்திருந்தால், டளஸ் யாழ்ப்பாணத்திற்கு வந்து தமிழில் உரையாற்றியிருக்கலாம். டக்ளஸ் மாத்தறைக்குச் சென்று சிங்களத்தில் உரையாற்றி இருப்பார்.

இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒரே இனமாக திகழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். அந்த வகையில் தான் அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களான நாம் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளோம்.

நான் யாழ்ப்பாணத்தில் உயர் தரத்தில் படிக்கும்போது, 1981ஆம் ஆண்டு ஜுன் மாதம் அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்றது. அந்த நாளில் தான் ஜக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து பொதுநூலகத்தில் தாக்குதல் மேற்கொண்டனர்.

ஆனால், 13 வாக்குப்பெட்டிகள் காணாமல் போயிருந்தன. அந்த அபிவிருத்தி சபைத் தேர்தல் தான் உலகிலேயே மோசடி நிறைந்த தேர்தலாகும். அந்தத் தேர்தலில் இலங்கை சமுதாயத்திற்கு நம்பிக்கையினை இழந்த நாளாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அன்று நடத்திய அநியாயத்திற்காக நான் யாழ்ப்பாண மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்.

தற்போது நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நாட்டின் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கும் வடக்கு மக்கள் நியாயமான முறையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில், இனவாதம் மற்றும் பிரதேசவாதங்களை விளைவிற்கும் சக்திகளுக்கு இடம்கொடுக்காமல் இலங்கை தேசத்தில் எல்லா இன மக்களுக்கும் நன்மதிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே வழங்கும்’ என்றார்.

தொடர்புடைய செய்தி

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பல்கலைக்கழக கல்லூரிக்கு அடிக்கல்!