சிறிதரன் எம்.பி, உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை கண்டிக்க வேண்டும்: மனோ கணேசன்

manoஉதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய சக்திகளை தனிமைபடுத்தி முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையாகும். இவ்வாறான அழுத்தங்களை தமிழ் கட்சிகளும், ஊடகங்களும் காத்திரமாக கண்டிக்க வேண்டும்’ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னாலும் பலதடவை இந்த பத்திரிக்கை நிறுவனம் தாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக ஜனநாயக அரசியல் ரீதியாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக சுதந்திரத்தின் அடிப்படையிலும் செயல்படும் தமிழ் தேசிய சக்திகளை தனிமைபடுத்தி முறியடிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் செய்யப்படுவதை தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

வட இலங்கையிலிருந்து வெளியிடப்பட்டு உதயன் பத்திரிக்கை, தமிழ் தேசிய அரசியல், சமூக கருத்துகளை தொடர்ச்சியாக பிரச்சாரப்படுத்தி வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளை அம்பலப்படுத்தி வருகிறது. யுத்தம் நிகழ்ந்த காலத்திலும், இன்றும் அது தன் பணியை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் செய்து வருகிறது.

அதேபோல் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகம் முற்றுக்கையிடப்பட்டு அங்கிருந்து வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாலேயே, அலுவலக பாதுகாவல் நீக்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை போன்ற பல்வேறு அழுத்தம் தரும் செயல்பாடுகள் சிறிதரன் எம்.பி மீது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலை ஒலித்து வருகின்றனர். சிறிதரன் எம்.பி சமீப காலமாக மக்கள் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தும் பணியினை மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றில் பல தமிழ் எம்.பி.க்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். நானும் கடந்த காலங்களில் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளேன். இந்த பின்னணியில் இன்று சிறிதரன் எம்.பி.

இதன் அர்த்தம் அரசாங்கம் இன்று தமிழ் தேசிய சக்திகளை அடையாளம் கண்டு அடக்குமுறைகளை முன்னெடுக்கிறது என்பதாகும். இதை தமிழ் ஊடகங்களும், தமிழ் அரசியல் கட்சிகளும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து தமிழ் ஊடகங்களும், அனைத்து தமிழ் அரசியல்கட்சிகளும் ஒரு சேர தமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். அச்சுறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாகும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நமது உறுதியான ஆதரவை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பாதிப்புக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தனிமை பட்டுவிடக்கூடாது. இது நம்மை தனித்தனியாக பிரித்து அழிக்கும் முயற்சிக்கு வழி சமைக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.’

Recommended For You

About the Author: Editor