சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வராவிட்டால் அதற்கு காவல்துறையினர் எதனையும் செய்ய முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சிங்கள பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முழு அளவில் காவல்துறையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் நிலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர வருகை தராவிட்டால் அதற்கு காவல்துறையினர் பொறுப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் சிவில் உடையணிந்த மற்றும் சீருடை தரித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மேலதிகமாக நிலைமைகள் பற்றி கண்காணிப்பதற்காக புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆபத்தான சூழ்நிலை காணப்படுவதாக சிலர் பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு தாம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.