சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாதவரை தீர்வில்லை – சிறிதரன் எம்.பி

Sritharanதமிழ், சிங்கள மக்கள் இரண்டு தேசிய இனமாக இந்த நாட்டிலே வாழ உரித்துடையவர்கள். இந்த உண்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளாதவரை இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறவிருந்த போராட்டம் கண்டனக்கூட்டமாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

‘தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து சிங்கள மக்கள் தாமாக முன்வந்து போராட்டம் நடத்த முனைந்த போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வடக்கிலே தங்கள் துன்பங்களை சொல்லமுடியாது துப்பாக்கி முனையிலே அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இராணுவம் பொலிஸ் மூலம் தமிழ் மக்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மௌனமாக்கபட்டுள்ளார்கள்.

இனவாத அரசியல் பேசிப் பேசி சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள முடியாதவாறு இனவாத அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு, இனவழிப்பை மேற்கொண்டு தமிழ் மக்களின் இருப்பை அழித்தவர்களுக்கு எதிராகவே இன்று சர்வதேசம் நீதி கேட்கின்றது. மாறாக சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல.

தாம் மேற்கொண்ட இனவழிப்புக்கள் தொடர்பாக சர்வதேசத்திடம் இலங்கை அரசாங்கம் உண்மையை சொல்வதற்குகூடத் தயாராக இல்லை.

அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சிங்கள மக்கள் குரல் கொடுப்பதையோ சிங்கள மக்கள் அப்பிரச்சினையை புரிந்துகொள்ளவோ இந்த அரசாங்கம் அனுமதிக்காது.

சிங்கள மக்களிடம் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளின் உண்மைகள் சென்றடைவதை தடுக்க அரசு பல வழிகளில் முயல்கின்றது.

இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இலங்கை என்னும் நாட்டினுள் தமிழ் மக்கள், தமிழ் மக்களாகவும் சிங்கள மக்கள், சிங்கள மக்களாகவும் ஒன்றிணைந்து வாழவேண்டும்.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளின் படி அவர்களுடைய தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான உரிமைகள் வழங்கபடும் போதே தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இந்த நாட்டிலே ஒரு சுதந்திர வாழ்வை வாழ முடியும் என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor