சிங்கப்பூரில் இந்தியர் ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்ததால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பாகியுள்ளது.
சுமார் 27 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டிருப்பதுடன், ஐந்து காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் சில பொதுமக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
33 வயதான வெளிநாட்டு பணியாளர் (இந்தியர்) ஒருவர் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றினால் மோதி மரணமடைந்ததே இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 400க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து, கைகளில் தீப்பந்தத்துடன் தெருவில் களமிறங்கினார்.
இது சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கும் முறையல்ல. சுமார் 30 வருடத்திற்கு பிறகு சிங்கப்பூரில் முதன்முறையாக பொதுமக்கள் ஆர்ப்பாடம் ஒன்று இவ்வாறு கலவரமாக மாறியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாது என சிங்கப்பூர் போலிஸ் கமிஷனர் என்.ஜி. ஜூ ஹீ தெரிவித்துளார்.
சிங்கப்பூரில் கலவரம் மேற்கொண்டால், 7 வருட சிறைத்தண்டனை, மற்றும் பிரம்படி என்பன தண்டனையாக வழங்கப்படும் சாத்தியம் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழர்கள் எனவும் அஞ்சப்படுகிறது. லிட்டில் இந்தியா பகுதி தென்னிந்தியர்கள் மற்றும் தெற்காசியவர்கள் அதிகம் பணிபுரியும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.