சாவகச்சேரி நகர்ப்பகுதி கடை ஒன்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள மல்ரி சென்ரர் வர்த்தக நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி இரவு கூரைத் தகட்டினைப் பிரித்து உள்ளிறங்கிய திருடர்கள் அங்கிருந்து சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சரசாலை பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு தங்க ஆபரணங்கள் ,மற்றும் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் அங்கு சென்று சோதனையிட்ட போது குறித்த வீட்டில் களவாடப்பட்ட பொருட்கள் மற்றும் பல இலத்திரனியல் பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களின் இலக்கங்களும் டச்சு வீதியில் உள்ள கடையில் திருட்டு போயிருந்த பொருட்களின் இலக்கங்களும் வர்த்தக நிலைய உரிமையாளரால் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலைய திருட்டுச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாரால் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 8 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை சாவகச்சேரி பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு சாவகச்சேரி நகரப்பகுதி வர்த்தகர்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.