Ad Widget

சவுதியில் பணிபுரிபவர்கள் சம்பள பணத்தை இலங்கை A.T.M ஊடாகப் பெறும் வசதி

சவுதியில் பணிபுரியும் இலங்கை தொழிலார்களின் சம்பளத்தை இலங்கை ஏ.டி.எம்கள் ஊடாக இலகுவாகவும், துரிதமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி விடுத்த வேண்டுகோளை சவுதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொழில்கள் அமைக்க மத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக, அண்மையில் நாட்டின் வங்கித் துறையின் உயர்மட்ட தலைவர்கள் சவுதி அரேபியாவுக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தனர்.

ஹற்றன் நஷனல் வங்கி (HNB), இலங்கை வங்கி (BOC), செலான் வங்கி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு வங்கிகளின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு அர்ஜுன மஹேந்திரன் தலைமை தாங்கி சென்றிருந்தார்.

ஜித்தா மற்றும் ரியாத் நகரங்களில் அமைந்துள்ள சம்பா வங்கி, அரபு வங்கி, அல் ரஜ்ஹி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் மூத்த வங்கி அதிகாரிகள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதை அடுத்தே அர்ஜுன மஹேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களுடன் தொழில் புரிவோர் அனுப்பும் அந்நிய செலாவணி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

Related Posts