சர்வதேச கண்காணிப்பு குழு விரைவில் இலங்கை விஜயம்

comm.chogm_வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்புக் குழு விரைவில் வருகை தரவுள்ளதாக பொதுநலவாய அமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகளான ஆம்னா ஜதோய் மற்றும் மார்டின் குசிர்யே ஆகியோர், நேற்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, வடமாகாணசபைத் தேர்தல் கண்காணிப்புக்காக சர்வதேச கண்காணிப்புக்குழு விரைவில் இலங்கை வருகை தரவுள்ளதாக அரசாங்க அதிபரிடம் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதன்போது, வடமாகாண சபை தேர்தலின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர்.

வடமாகாண சபை தேர்தலின் ஆரம்ப நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுத் தாக்கல் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விபரங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் விளக்கமளித்தார்.

அத்துடன், தபால் மூல வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பதிவேடுகள் தாயாரிக்கப்பட்டு வருகின்றதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் விபரங்கள் மற்றும், வாக்களிப்பு நிலையங்கள், தேர்தல் தொகுதிகள் தொடர்பான விபரங்களையும் அவ்வதிகாரிகள் திரட்டிக்கொண்டனர்.

விரைவில் சர்வதேச மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்கள் யாழ். மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதால், அவர்களுக்கான உதவிகளை எவ்வாறு மேற்கொள்வீர்கள் என்றும் பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதனையும் சந்தித்து தேர்தல் நிலவரங்கள் மற்றும் வாக்காளர் விபரங்களை பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் திரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.