சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் உரிமைகளைப் பெறமுடியும் – சரவணபவன்

Saravanabavan _sara -mpசர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நேற்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அராஜகத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை தமிழர்கள் 1956ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டிலே வாழ வேண்டுமா? என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியிலே எழும் அளவுக்கு நாட்டிலே மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவர்களை மாற்றியுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகணத்தில் முப்படைகளும் எதற்காக நிலை கொண்டுள்ளார்கள். அவர்கள் இன்னும் வடமாகாணத்தில் நிலை கொண்டு இருக்கத்தான் வேணுமா என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பார்த்துக் கேட்கின்றேன்.

புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறும் அவர் எதற்காக இன்னமும் வடமாகாணத்தில் முப்படைகளையும் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றார்கள். தங்களுடைய சிப்பாய்க்களை தமிழ்மக்கள் மீது ஏவிவிட்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் கொடுமைப்படுத்தவே முயல்கின்றார்கள் என்று சரவணபவன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு நல்லிணக்கத்திற்கு ஏதுவாக இதுவரை அரசாங்கம் எதுவுமே செய்யாமல், தொடர்ந்து தமிழ்மக்களை தனது அராஜகத்திற்கு உட்படுத்தியே வருகின்றது.

தமிழர்களின் பிரச்சினைகளை தாம் தீர்த்துவைப்பதாக விமல் வீரவன்ஸ போன்றவர்கள் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தீப்பதாக இல்லை. விமல் வீரவன்சவின் தாத்தா கூறினார், பின்னர் அவரின் அப்பா கூறினார், இன்று விமல் வீரவன்சே கூறுகின்றார் நாளை அவற்றின் மகன் கூறுவார்.

தமிழர்களுக்கான உரிமையினை ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திர முன்னணி, போன்ற எந்த ஒரு பெரும்பான்மை கட்சிகளும் தீர்த்து வைக்கப்போவதில்லை. சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.