யாழ். இசைவிழா- 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 1ம், 2ம் திகதிகளில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே உள்ள யாழ். மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ரோயல் நோர்வே தூதரகம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பு (USAID) ஆகியன யாழ். இசைவிழா நிகழ்விற்கு நிதியுதவி அளிப்பதுடன், Rikskonsertene (Concerts Norway) மற்றும் அருஸ்ரீ கலையகத்தின் ஆலோசனையுடன் சேவாலங்கா மன்றம் இவ்விழாவை ஒழுங்கமைக்கவுள்ளது.
இவ்விழாவானது, இலங்கை இணக்கப்பாட்டு பணியகம் மற்றும் யாழ்.மாநகர சபை ஆகியவற்றின் இணை அனுசரணை வழங்குகின்றன. இந்நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களின் நிகழ்வுகளுடன் சர்வதேச கலைஞர்களின் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியின் போது காலையில் நிகழ்வுகள் யாவும் பிரேத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மேடைகளில் பாரம்பரிய, சாஸ்திரிய மற்றும் சமகால இசை நிகழ்வுகளாக நடைபெறும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களும் காலை 9.00 முதல் நண்பகல் 12.00 மணிவரையும் அவர்களிற்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக கூடாரங்களில் நடைபெறும்.
காலை நேர நிகழ்வுகள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கான இசைப் பயிற்சிப் பட்டறையாக அமைகிறது. பாரம்பரிய இசை வரலாறுகளில் ஆர்வம் நிறைந்த அனுபவமிக்க கலைஞர்கள் இசைக் கருவிகளுடன் கலந்து கொண்டு இவ் நிகழ்ச்சியினை மெருகூட்டுகின்றார்கள்.
இத் திறமை வாய்ந்த அனுபவம் மிக்ககலைஞர்களால் பிரதான மேடையில் நிகழ்வுகள் பி.ப 5.00 மணி தொடக்கம் பி.ப 10.30 மணி வரையும் நடைபெறும். கலைஞர்களின் பிரதான மேடை நிகழ்வுகள் பல்வேறு பிரிவுகளாக நடைபெறவுள்ளன.
பாரம்பரிய இசை நிகழ்வுகளாக மறைகாத்த மாவீரர் (கத்தோலிக்க கூத்து பாசையூர்- யாழ்ப்பாணம்), பக்கீர்பைத் (அம்பாறை), பப்பரவாகன் கூத்து (சுழிபுரம், யாழ்ப்பாணம்), பறைமேளக் கூத்து (முள்ளியவளை, முல்லைத்தீவு), மட்டக்களப்பு நகரின் பாரம்பரிய பாடல்கள் (மட்டக்களப்பு), சன்னியகும (பென்தர, பாணந்துறை), வேளம்பு எடுத்த வீராங்கனை (முள்ளியவளை, முல்லைத்தீவு) ஆகியன நடைபெறும்.
சாஸ்திரிய இசை நிகழ்வுகளாக கொழுப்பு பிறாஸ் இசைக் குழு (இலங்கையின் முதற்தரபிறாஸ் வாத்தியக் குழு), நாதரஞ்சனி (கர்நாடகசங்கீதக் குழு), கீழைத்தேச வாத்திய இசைக் குழு (Oriental Music Orchestra), பூலான் தேவி இசைநாடகம் (காயத்ரிகேமதாச இசை நாடகத் திட்டம்), சங்கீத சங்கமம் (அனுபவிமிக்க ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்கள் சந்திப்பு), மங்கள இசை (தவில், நாதஸ்வரம்) ஆகியன நடைபெறும்.
சமகால இசை நிகழ்வுகளாக நாட்றோ (Percussion), ரன்வலப்றிகேட் (Ranwala Brigade), ரவிபந்து வித்யாபதி மேளவாத்தியக் குழு, சப்தமி, இசைகளின் தொகுப்பு (The Music matters Collective)கொழும்பு என்பன நடைபெறும்.
அதேபோல் சர்வதேசக் குழுக்களாக பங்களாதேஸ், பிரேஸில், இந்தியா, நோர்வே, பலஸ்தீன் ஆகிய நாடுகளிலிருந்து கலைஞர்கள் வருகை தரவுள்ளனர்.
யாழ் இசை விழாவின் முன்னோட்ட நிகழ்வுகளாக பல்வேறுபட்ட கிராம மட்ட இசை நிகழ்வுகள் முள்ளியவளை -முல்லைத்தீவு மற்றும் பாசையூர்- யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பெப்ரவரி 09ம் 10ம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கின்றது.