Ad Widget

சர்ச்சைக்குரிய எரிபொருள் நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம், பிரதான வீதியில் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் சுடத் மடுகல்ல, லங்கா இந்திய பெற்றோலிக் கூட்டுஸ்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் தனஞ்சயன் சிறிவஸ்தாவ ஆகியோர் இணைந்து இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.

மேற்படி இடத்தில் எரிபொருள் நிலையம் அமைப்பதற்கான அனுமதி முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது.

மேற்படி இடத்தில் எரிபொருள் அமையப் பெறுவதால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளின் நீர் மாசுபடும், வீதியின் வளைவில் எரிபொருள் நிலையம் அமையப் பெறுவதால் எரிபொருள் நிலையத்துக்குள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் ஆகிய விடயங்கள் அப்பகுதியிலுள்ள பொதுமக்களால் மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, கொடுக்கப்பட்ட அனுமதியை முதல்வர் இரத்துச் செய்திருந்தார்.

இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் நிலையத்தை அமைத்த முன்னாள் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

கொடுத்த அனுமதியை இரத்துச் செய்ய முடியாது, அனுமதி கொடுக்க முன்னரே பரிசீலணை செய்திருக்க வேண்டும் மற்றும் அனுமதியை இரத்துச் செய்வது தொடர்பில் சரியான காரணங்களை மாநகர சபை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறியுள்ளது எனத் தெரிவித்த நீதிமன்றம்,அனுமதி செல்லுபடியாகும் என அறிவித்தது.

இதனையடுத்து, எரிபொருள் நிலையத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Related Posts