தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனைத் தொடர்பு கொண்டபோது,
“குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார்.
0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது” என்று தெரிவித்தார்.
தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளதுடன், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கமும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
–