இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்டத் தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார்.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடையம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் துணைவியாரான வட மாகாண பை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட ஐந்து போராளிகளின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜென்ரல் சானக்க குணவர்த்தன நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில் மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி க.ரத்னவேல் குறுக்கு விசரணைகளை மேற்கொண்டார்.
இதன்போது இராணுவ அதிகாரி கடந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் முன்வைத்த தகவல்களுக்கும், இன்று தெரிவிகும் கருத்துக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதேவேளை பெப்ரவரி மாதம் நடைபெற்ற விசாரணையின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்பட்டியல் இருப்பதாக தெரிவித்திருந்த படைத் தளபதி மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன, புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியலையே தான் குறிப்பிட்டதாக இன்றும் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இராணுவத்தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மனுதாரர் தரப்பு சட்டத்தரணியான கே.எஸ்.இரத்தினவேல் அரசியல்வாதி போன்று செயற்படுவதாக மன்றில் விமர்சித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.