திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் காணிச் சொந்தக்காரர்கள் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று சனிக்கிழமை காணிகளை துப்பரவு செய்த, தற்காலிக கொட்டகைகள் அமைத்து தங்கியிருந்த பலரை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
குறித்த காணிகள் தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என பொலிஸ் தரப்பு கூறுகிறது. காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே பொலிஸார் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாக சம்பூர் மக்கள் கூறுகின்றார்கள்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.