சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதில்லை!

சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைக்க போவதில்லை என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த வியடம் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கையில் முன்னதாக நுரைச்சோலை பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்று சீன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவதாக திருகோணமலை – சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றை இந்திய அரசின் உதவியுடன் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன்பொருட்டு போர்க் காலத்தில் சம்பூர் மக்கள் அந்த பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்திருந்த வேளை, சுமார் 500 ஏக்கர் காணி அடையாளமிடப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகளும் நடைபெற்றன.

எனினும், அப் பகுதி மக்கள் அதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த நிலையில் தற்போது அப் பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்கப் போவதில்லை என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor