சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்புக் குழு ஐ.நா.முன் சாட்சியமளிக்கத் தயாராம்!

suresh“இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தால் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழு ஏதோவொரு வழியில் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளது.’

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தவை என ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

“தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு தொகுதி ஆவணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் ஏற்கனவே கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.

தற்போதும் இது தொடர்பான மேலும் ஆவணங்களை நாம் சேகரித்து வருகின்றோம். இந்த ஆவணங்கள் ஐ.நா.விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.”

“இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமெனில் இங்கு இடம்பெற்ற கறைபடிந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

இந்தக் கடமையை இலங்கை அரசு செய்யவில்லை. இந்நிலையில், ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.

நாம் நடந்த உண்மைகளை – தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை – நீதியின் பிரகாரம் ஐ.நா. குழுவிடம் வாய்மொழி மூலம் தெரிவிக்கத் தயாராகவுள்ளோம்” – என்று சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார்.