சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

daklasயாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு, அதனூடான செயற்திட்டங்கள் பூரணமாக முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் தற்போது காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு அதனூடாக அபிவிருத்திச் செயற்திட்டங்கள் யாவற்றையும் சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும்.

இதனிடையே, தீவுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தீவகப் பகுதிகளில் கடமையாற்றக் கூடிய வகையில் நியமனங்கள் வழங்கப்படுவதுடன், வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் ஊடாக அவர்களுக்கான நலன்சார் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளருக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச ஆகியோர் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்த அதேவேளை, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிதிகளும் இதன் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் ஜெகத் குமார, ஈ.பி.டி.பி.யின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் அம்பலம் இரவீந்திரதாஸன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor