சனசமூக நிலையங்களின் ஊடாக கிராமங்களை மேம்படுத்துவோம்; ஈ.சரவணபவன்

saravanabavan_CIஒவ்வொரு கிராமத்தினதும் வளர்ச்சியில் பங்காற்றக்கூடிய சனசமூக நிலையங்களை அபிவிருத்தி செய்து அதனூடாக கிராம முன்னேற்றத்துக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம் மற்றும் சனசமூக நிலையத்தினதும் பொன்விழா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழக வேலாயுதம்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகத்தின் தலைவர் இ.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் மேலும் தெரிவித்ததாவது:

போர்ச் சூழலால் பல இடங்களில் சனசமூக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.எனினும் கொக்குவில் சனசமூக நிலையம் தனது சேவையில் 50 வருட நிறைவைக் கண்டுள்ளது. இதற்குக் கழகத்தின் இடைவிடாத சேவை மற்றும் உறுப் பினர்களின் விடாமுயற்சியே காரணம்.

ஒவ்வொரு கிராமத்தினதும் வளர்ச்சியில் சனசமூக நிலையங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இதனூடாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது நன்மை தரும்.

அந்த வகையில் கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் மிகத் திறமையான சேவையை வழங்கி வருகின்றனர். இதற்கான முயற்சிக்கு எனது பங்களிப்பையும் வழங்கத் தயாராகவுள்ளேன் என்றார்.

இந்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் கு.சுரேஸ்குமார் தம்பதியர் கொக்குவில் வளர்மதி நிறுவக உறுப்பினர் எஸ்.குகனேந்திரன், பி.ஜெகநாதன்,எஸ்.சிதம்பரநாதன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலை நிகழ்வுகளும் உதவித் தொகை கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.