சந்திரகுமாரை கூட்டமைப்பில் இணைத்தால் கட்சியை விட்டு வெளியேறுவதாக சிறிதரன் எச்சரிக்கை!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைத்தால் கட்சியைவிட்டுத் தான் வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எச்சரித்துள்ளார்.

தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அந்த அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையை அடியோடு மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சந்திரகுமாரைக் கட்சிக்குள் இணைத்தால் தான் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தன்னிச்சையாகச் செயற்படுவேன் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியினரை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைக்குமாறு புளொட் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பரிந்துரைத்தார்.

அவரது பரிந்துரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுவால் ஆராயப்பட்டது. எனினும் முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Related Posts