க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அடையாள அட்டை அவசியம்; பரீட்சை ஆணையாளர்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.

இருப்பினும் ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று 16 வயது முழுமையடையாத பரீட்சார்த்திகள் தபால் திணைக்களத்தினால் வழங்கப்படும் தபால் அடையாள அட்டையை பரீட்சையின்போது உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தபால் அடையாள அட்டையின் 2 ஆவது மற்றும் 3ஆவது பக்கங்கள் பரீட்சார்த்திகளின் படத்துடன் பிரதிகள் எடுக்கப்பட்டு பரீட்சை நிலையத்தின் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் 16 வயது பூர்த்தியாகியும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தமது அடையாளத்தை உறுதிபடுத்தும் வகையில் வாகன அனுமதிப் பத்திரத்தினை உபயோகிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சார்த்திகள் ஒவ்வொரு தடவை பரீட்சைக்கு சமுகமளிக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் மேற்படி ஏதாவது ஒரு அடையாள அட்டையை பரீட்சை நிலையத்துக்கு எடுத்துவர வேண்டியது அவசியமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்.