கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் சுன்னாகத்தில் கைது!

சுன்னாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் நேற்றிரவு மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயமே சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சுன்னாகம் ஐயனார் கோயிலடிப் பகுதியில் அடிக்கடி கோஷ்டி மோதல்கள் இடம்பெறுகின்றன என அப்பகுதி மக்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கு கூடும் இளைஞர்களிடையே கடந்த இரண்டு நாட்களாக மோதல் இடம்பெற்றது.

இது குறித்து அறிந்த பொலிஸார் நேற்றிரவு அப்பகுதிக்கு சென்றிருந்தனர். பொலிஸாரைக் கண்டதும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் ஓடித் தப்பினர்.

ஆனால் பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைது செய்தனர். தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த மோதலின் போது ஓட்டோ, மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொருக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.