மகஸீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
வடமராட்சி புலோலியிலுள்ள கோபிதாஸின் இல்லத்தின் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அத்துடன், கோபிதாஸின் இறுதிக் கிரிஜை நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்போது, கோபிதாஸின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கூடடமைப்பினர் தமது ஆறுதலையையும் தெரிவித்திருந்தனர்.
இதே வேளை கோபிதாஸ் சிறையில் இருந்த காலப்பகுதியில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதரகம் மேற்கொண்டதாக தூதரகத்தின் நிபுணத்துவப் பிரிவு அதிகாரி ஜோன் நெய்ல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்து அதற்கு தீர்வு காணுதல் மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜோன் நெய்ல் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
நெய்ல், யாழ் எக்ஸ்போ பிற் விருந்தினர் விடுதியில் வைத்த பத்திரிகையாளர்கள் சந்தித்த போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கோபிதாஸிற்கு சிறையில் இருக்கும் போது அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்திருந்தோம். இருந்தும் எமது திட்டத்தில் அவர் இறந்த பின்னர் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை’ என்றார்.
‘பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்று இங்கு வாழ்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே வந்துள்ளேன். அதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களின் தேவைகளையும் நிறைவு செய்யவுள்ளோம்.
குடும்பங்களைப் பிரிந்து இருப்பவர்களைச் சந்தித்து என்ன பிரச்சினை காரணமாக நீங்கள் பிரிந்து வாழ்கின்றீர்கள் என்பது தொடர்பாக அறிந்து அதனை பிரித்தானியாவிலுள்ள அவரது மற்றய குடும்ப அங்கத்தவர்களையும் வினாவி அவர்களை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்ட வர முயற்சிப்போம். அத்துடன் அவர்களின் பிரச்சினைகளை இரகசியமாக வைத்திருப்போம்’ என்றார்.
அத்துடன், இலங்கைச் சிறைகளில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அந்தளவு உதவிகளைச் செய்வோம். அத்துடன் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்போம்.
கொழும்பினை அண்டிய பகுதிகளில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு 24 மணிநேரத்தில் நாங்கள் உதவிகளைச் செய்வோம் என்பதுடன் தூர இடங்களில் வசிப்போருக்கு (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) 48 மணித்தியாலங்களுக்குள் தேவைப்படும் உதவிகளைச் செய்து முடிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.