கோட்டா முறையில் மாற்றம் யாழ்.மாணவருக்கு பாதிப்பு??

jaffna-universityபல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி தொடர்பில் நடைமுறையில் இருக்கும் மாவட்டக் கோட்டா முறை மாற்றப்பட்டால், அண்மைய சனத் தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் இருந்து பல் கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கோட்டா முறையை மாற்றுவது தொடர்பான விடயம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுச் சபை அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இன்னும் அது சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் மூலம் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான யாழ்.மாவட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதற்குச் சந்தர்ப்பம் மிகக்குறைவாகவே உள்ளது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார்.

மாவட்டக் கோட்டா முறை மாற்றி, அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் அது பற்றிக் கேட்டபோதே பேராசிரியர் சிவநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

1981 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பின் பிரகாரமே மாவட்ட கோட்டா தீர்மானிக்கப்படுகிறது. அதாவது தெரிவு இடம்பெறுகிறது. அன்று தொடக்கம் 40 வீதமான மாணவர்கள் அவர்களின் திறமை அடிப்படையிலும், 55 வீதமான மாணவர்கள் அவர்களின் மாவட்டக் கோட்டா முறையிலும், 5 வீதமான மாணவர்கள் அவர்களின் பின்தங்கிய பிரதேச மாவட்டக் கோட்டா அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட சனத்தொகை மாற்றத்துக்கு ஏற்ப கோட்டா முறையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதன்பிரகாரம் தற்போதுள்ள கோட்டா முறையை மாற்றி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, புதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு கோட்டா முறை மாற்றப்படும் பட்சத்தில் அண்மையில் மேற் கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பின்படி யாழ்.மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். சனத்தொகைக் கணிப்பீட்டின்படி முன்னர் 6 இலட்சமாக இருந்த யாழ். குடாநாட்டுச் சனத்தொகை தற்போது 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படியே பல் கலைக்கழகத்துக்கான தெரிவு இடம்பெறும். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். ஆனால் மாவட்டக் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறவேண்டும். அதன் பின்னரே அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

ஆயினும் இது சபையின் அங்கீகாரத்துக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படாமையால் கடந்த வருடம் க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் மிகக்குறைவு.

மாவட்டக் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுவது மாணவர்களின் திறமை அடிப்படையிலே அமையவுள்ளது. எனவே எமது மாணவர்கள் மேலதிகமாக நிறையக் கற்றலில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.

சாதாரண கற்றல் மூலமாகப் பரீட்சையில் சித்தியடையலாம். ஆனால் மேலதிகமாகப் போட்டி அடிப்படையில் கற்பதன் மூலமாகவே பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Recommended For You

About the Author: Editor