கொளுத்தும் வெயிலால் பரிதவிக்கின்றது வடக்கு

hot-sun-thermometerயாழ்ப்பாண மாவட்டத்தில் என்றுமில்லாத வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 45 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.

அதேவேளை வடக்கு மாகாணத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது வறட்சியான நிலைமை காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு அதிக மாகக் காணப்படும் வறட்சியான காலநிலை காரணமாகவே வடக்கு மாகாண பரிதவிப்பான இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட அரச அதிபர், “இந்த வறட்சியான காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் 42 ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக 34 ஆயிரம் குடும்பங்களும், மறைமுமாக 8 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நெல் உற்பத்தி மற்றும் வெங்காய உற்பத்தி என்பனவும் பாதிப்படைந்துள்ளன.

யாழ்.மாவட்டத்தில் வருடாந்தம் 11 ஆயிரம் ஹக்டேயர் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டு 4 ஆயிரத்து 752 யஹக்டேயரிலேயே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வெங்காய உற்பத்தி 2 ஆயிரம் யஹக்டேயரில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற போதும் இந்த ஆண்டு 400 ஹக்டேயரே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் இந்த வறட்சியான காலநிலையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் தீவகப் பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது.

இவை குறித்து அரச அதிபர் குறிப்பிடும்போது,

“விவசாய நடவடிக்கைகளில் கூலி வேலை செய்பவர்கள் என்ற அடிப்படையில் வறட்சி காரணமாக 8 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை ஆகிய நான்கு பிரதேச செயலகங்களிலும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கான குடிதண்ணீர் பவுஸர்கள் மூலம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அந்த நடவடிக்கைக்காக இடர்முகாமைத்துவ அமைச்சால் 4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதைவிடவும் 3.75 மில்லியன் ரூபா தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இந்தக் காலநிலை தொடருமாயின் யாழ்.மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. நல்லூர், கரவெட்டிப் பிரதேச செயலகங்களும் அதற்கு அடுத்த கட்டமாக சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களும் இந்த வறட்சியால் பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என்று இனங்காணப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 928 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 ஆயிரம் குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 6 ஆயிரம் குடும்பங்களும் குடிதண்ணீர் பற்றாக்குறையால் பெரும் பாதிப்படைந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor