கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை!

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் காணாமல்போன அல்லது கொல்லப்பட்ட 41 ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு வடபகுதி ஊடகவியலாளர்கள் சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை தென்பகுதிக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று (வியாழக்கிழமை) சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடும்போதே மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன், திகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் மற்றும் கொழும்பில் கொலைசெய்யப்பட்ட தராகி சிவராம் ஆகியோர் தொடர்பான விசாரணைகளை முதலில் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், தகவலறியும் சட்டத்தை நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்த ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தொழில் ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளதுடன், ஊடகவியலாளர் ப்ரெடி கமகே மீதான தாக்குதலுக்கும் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

Related Posts