கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரொருவரை யாழ். மேல் நீதிமன்றம் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளது.
திருநெல்வேலி, மாரியம்மன் வீதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் (வயது 28) என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி கொலைசெய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த குலசேகரம் கபிலன் உள்ளிட்ட மூவரே கோப்பாய் பொலிஸாரினால் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மேற்படி வழக்கில் முதலாம் சந்தேக நபரான குலசேகரம் கபிலன் சார்பாக அவரது மனைவி கபிலன் தயானி யாழ். மேல் நிதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த சந்தேநபர், 30 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார். குறித்த சந்தேக நபர் பிணையில் விடுதலைச்செய்வதனை அரச சட்டத்தரணி ஆட்சேபித்தார்.
அத்துடன், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் காலை 9.00 முதல் 12.00 மணிக்குள் கையொப்பமிடுமாறும் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் ஏனைய, சந்தேக நபர்கள் மூவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.