இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கோவிட் – 19 புதியதொரு நோயாக உலகின் கவனத்தை ஈர்த்தது. உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலிருந்தே இது முழுமையாக புதியதொரு நோய் எனவும், அவர்களும் இந்த நோய் தொடர்பாக இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் மிகவும் நேர்மையாகத் தெரிவித்து வந்தனர். சர்வதேசப் போக்குவரத்தினைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே 2020 பெப்ரவரி 29 ஆம் திகதி வரை உலக சுகாதார அமைப்பின் நிலைப்பாடாகக் காணப்பட்டது. சமூக இடைவெளியைப் பேணிச் செல்வது கடினமாயின், முகக் கவசத்தினைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிபார்சினை அவர்கள் ஏப்ரல் 06 ஆம் திகதியே அவர்கள் வெளியிட்டனர். இந்த நோய் தொடர்பாக எல்லா நாடுகளும் அனுபவங்களினூடாகவே கற்றுக்கொண்டன.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை முன்கூட்டியே தயாரானது. ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணி நிறுவப்பட்டது. மார்ச் 04 ஆம் திகதி இலங்கையில் ஒரு கொரோனா நோயாளியேனும் இல்லாத நிலையிலும் ஹெந்தல பிரதேசத்தில் முதலாவது தனிமைப்படுத்தல் நிலையம் அறிவிக்கப்பட்டது. மார்ச் 10 ஆம் திகதி இரவு இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். மறுநாள் 11 ஆம் திகதியிலிருந்து கொரோனா நோய் அதிகளவில் பரவும் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆரம்பத்திலிருந்தே முப்படையினரும் பொலிசாரும் நோயாளர்களுடன் பழகிய நபர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையினால் இந்த நோய் திருப்தியடையும் மட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலகளவில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. இது தொடர்பாக எமது அரச வைத்தியர்கள், தாதியர் உட்பட சுகாதாரப்பிரிவினர், நோயாளர்கள் பழகிய நபர்களைக் கண்டறியும் பணியை சிறப்பாக மேற்கொண்ட உளவுப்பிரிவினர், இந்தப் போராட்டத்தில் முன்நின்று மக்களை வழிநடாத்திய முப்படையினர், பொலிசார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆற்றிய இந்தப் பணி தொடர்பாக உண்மையில் பெருமைப்பட வேண்டும். இது வரைக்கும் இங்கிலாந்தில் வசித்த 25 இலங்கையர்கள் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ள போதிலும், இந்த நோய் காரணமாக இலங்கையிலுள்ள இலங்கையர்கள் ஒன்பது பேர் மாத்திரமே மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடந்த நவம்பர் 16 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படாவிடின், இந்த எந்தவொரு வெற்றியும் மக்களுக்கு கிடைத்திருக்க மாட்டாது என்பதையும் கூற வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் அறிந்த வகையில், ஊடரங்குச் சட்டத்தைப் பிறப்பித்து நாட்டை ‘ஷட் டவுன்’ பண்ணுவதாக கூறினாலும், உலகில் எந்தவொரு நாட்டையும் முழுமையாக ‘ஷட் டவுன்’ பண்ண முடியாது. மக்களில் அதிகமானோர் வீடுகளில் இருக்கும்போது மேலும் பல மில்லியன் பேர் மக்களுக்காக வேலை செய்ய வேண்டியேற்படுகிறது. நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட நாட்களில் கூட சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், பொலிசார், நெல் விவசாயிகள், மரக்கறி விவசாயிகள், மீனவர்கள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிப்போர் மற்றும் சில தொழிற்சாலைகள் கூட வழமை போன்று செயற்பட்டன. ஆரம்பம் முதல் காணப்பட்ட நிலைமையைப் படிப்படியாக ஏற்படுத்துவதே நாட்டைய இயல்பு நிலைக்கு மாற்றுதல் என்பதன் மூலம் கருதப்படுகிறது.
அரச துறையிலும், தனியார் துறையிலும் முதலில் சிறியளவான ஊழியர்களைப் பணியிடங்களுக்கு அழைத்து, பஸ் வண்டிகளிலும், புகையிதரங்களிலும் ஒரு தடவையில் பயணிக்க முடியுமான பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, பாடசாலைகள், மேலதிக வகுப்புக்களைத் தொடர்ந்தும் மூடி வைத்து, முடியுமானளவு சமூக இடைவெளியைப் பேணிச் செல்வதுடன் நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னர் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தினை சில மணித்தியாலங்கள் தளர்த்திய ஆரம்ப சந்தர்ப்பத்தில் மக்கள் சமூக இடைவெளியைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டமையினை நாம் அவதானித்தோம். எனினும் சில நாட்களின் பின்பு மக்கள் அதனை விடவும் சிந்தித்து செயற்பட்டமையினை அவதானித்தோம்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பும் அவ்வாறு சிந்தித்து நடந்துக் கொள்வது அத்தியாவசியமானதாகும். கொரோனா வைரஸ் ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும், அது முழுமையாக மறைந்து போகவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நோயாளர்களைக் கண்டறிவதற்காக மக்கள் மத்தியில் மாதிரிப் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும். எதிர்காலத்திலும் கொரோனா வைரஸ் தொற்றுடைய நோயாளிகள் கண்டறியப்படலாம். எனினும் அவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை எமது சுகாதாரப்பிரிவினர் மேம்படுத்தியுள்ளனர் என நம்புகிறேன். எதிர்காலத்திலும் முன்னர் போன்று சில பிரதேசங்களைத் தனிமைப்படுத்தல், பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல் நடவடிக்கைகள் தேவைப்படலாம். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் முடியுமான எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்வினை மீள ஆரம்பித்தல் ஆகிய இரண்டையும் சமநிலையில் பேணிச் செல்ல வேண்டும். இலங்கையில் மாத்திரமன்றி கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் மரணித்த இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இச்சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்வினை மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளன.
கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரப் பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிசாருக்கு மக்கள் வழங்கிய அதே ஒத்துழைப்பினை, நாட்டை இயல்பு நிலைக்கு மாற்றும் செயற்பாட்டிலும் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.