கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் – இரா.சம்பந்தன்

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ் வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்

இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரனா திடீர்ப்பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில் நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பவதிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலினை முறியடிப்போமாக என சம்பந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor