இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது, காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின் கருத்தின் மூலம் உறுதியாகியிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
‘கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமைக்கு ஆதார பூர்வமான சாட்சிகள் எதுவும் இல்லை. மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில் மாத்திரமே இவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. வீசப்பட்டாலும் கூட சர்வதேச சட்டத்துக்கு முரணானது இல்லை’ என்றும் பரணகம கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கள் மூலம் கொத்தணிக் குண்டுகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹோமியோபதி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹோமியோபதி சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவானது அரசியலமைப்பு அமைவாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றம் தன்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
இந்த விவாதத்தில் அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் கோரியுள்ளது. உண்மையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவரவேண்டும் என அரசாங்கத்துக்கு எண்ணம் இருந்தால் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
‘கோட்டா முகாம்கள்’ என சித்திரவதை முகாம்கள் இருப்பதாக நாம் சுட்டிக்காட்டியபோதும், அவை மறுக்கப்பட்டன.
எனினும், ஐ.நா அதிகாரிகள் இங்குவந்தபோது அவற்றை பார்வையிட்டிருந்தனர். இதுபோன்ற விடயங்களில், அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவதே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றார்.
அதேநேரம், சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
எனினும், வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளைத் திருத்துவதற்காக கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வட்டி அறவிடப்படுகிறது. இவ்வாறான பக்கச்சார்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் திருத்த அரசாங்கம் இலவச உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.