கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசியுள்ளேன் -முதலமைச்சர் சி.வி

சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலைதொடர்பில் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

palithaa

வடமாகாணத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோவிற்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் கேட்டபொழுதே இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இச்சந்திப்பு அவர் எனது நண்பர் என்ற ரீதியில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் ரீதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரதும், கைதிகளதும் அவல நிலை குறித்தும் விவாதித்தோம். பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களில் அமைச்சர்களாகவும் ஓரளவு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் சிறைகளில் வாடுகின்றமை தொடர்பிலும் மனிதநேய அடிப்படையில் கலந்துரையாடினோம்.

இவ்வாறு சிறைகளில் வாடுபவர்களது உளநலம் பாதித்து வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களாக காணப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டினேன். இவற்றை செவிமடுத்த சட்டமா அதிபர் இவ்விடயம் தொடர்பில் சட்டவல்லுனர்களும் பேசுயுள்ளதாகவும் இது தொடர்பில் சட்டத்திற்கு உட்பட்டு முடிந்தவற்றை செய்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார், மேலும் அரசியல் தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம் என்றார்.