தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட ஆணைக்கோர் மனுவை (ரிட் மனு) நேற்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்த போதே நீதியசர்கள் குழாம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த ஆணைக்கோர் மனு, மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டதன் பின்னரே கே.பி.யை கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரயிருந்தது.
கே.பி. மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும், எந்தவிதமான விசாரணைகளும் இன்றி, எந்தவிமான சட்டநடவடிக்கைகளும் இன்றி கிளிநொச்சியில் அவர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றார். பணம், தங்கம், கப்பல்கள் அனைத்தையும் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் கே.பி.யும் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்களா என்கின்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது என்றும் அக்கட்சி கூறியிருந்தது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வு பெற்று சிவில் வாழ்க்கையில் இணைந்துகொண்டுள்ள நிலையில், கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் எந்தவிதமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படவில்லை. கே.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விபரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக விளக்கம் கோரப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்கெனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.