கூட்டமைப்புக்குள் பிளவு இல்லை – தலைமையின் முடிவை ஏற்று நடக்கிறோம்!: மாவை சேனாதிராஜா

mavai mp inதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எங்கள் தலைமையின் முடிவை நாங்கள் பூரணமாக வரவேற்பவர்கள். ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் நிற்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியின் போதே இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென மக்களும் ஆதரவாளர்களும் என்னை வற்புறுத்திய போதும் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் மக்கள், கட்சி ஆகியன விரும்புமாக இருந்தால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்பதை மாத்திரமே நான் கூறியிருந்தேன்.

யாரிடமும் என்னை முதலமைச்சர் வேட்பாளரக நியமியுங்கள் என நான் கேட்கவில்லை. இந்த நிலையில்தான் எமது கட்சியின் தலைவருக்கும் செயலாளருமாகிய எனக்குமிடையில் ஒரு பிளவு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் ஒன்று சேர்ந்து நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும்.

சர்வதேசத்தில் நிலவுகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கமானது பேசி தீர்வு காணப்பட வேண்டுமென சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் நான் ஒரு வேட்பாளனாக நின்று ஒரு போட்டியை பிளவை ஏற்படுத்த எனது மனம் இடங்கொடுக்கவில்லை. அதன் காரணமாகவே நான் அந்தப் போட்டியினைத் தவிர்த்துக்கொண்டேன்.

இன்று கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த நீதியரசர். மதிப்புப்பெற்றவர். அதன் காரணமாகவே அவரை நாம் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இதுகட்சியின் ஏகோபித்த முடிவு. நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். எனக்கும் தலைமைக்கும் இடையில் எந்த வேறுபாடும் பிளவும் இல்லையென்பதையும் கூட்டமைப்பில் சிறந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாகவே எனது முடிவு அமைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.