கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் முழுமையான தீர்வை எதிர்பார்ப்பது தவறு – கஜேந்திரகுமார்

தமிழர்கள் அடியோடு நிராகரித்துள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்திவிட்டு, அரசாங்கத்திடமிருந்து முழுமையான தீர்வை எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்நிலையில் அவரைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு குறுகிய நேரம் வழங்கப்பட்டது.

இதன்போது கூட்டமைப்பினர் எதனைக் கூறுவார்கள் என்பது முக்கியமான விடயமாகக் காணப்பட்டது. கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைக்கூறாது, தமிழ் மக்கள் நிராகரித்துள்ள 13ஆம் திருத்தச்சட்டம் குறித்தே வலியுறுத்தினர்.

இவ்வாறு அந்நிய நாட்டுத் தலைவருடனான கலந்துரையாடலில் முக்கியமான விடயத்தை பேசாது, பிரதமரும் ஜனாதிபதியும் தம்மை ஏமாற்றிவிட்டதாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.