குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்த சம்பவம் உண்மை என ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு

tellippalai_policeதெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன, மற்றும் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எம். மகிந்த எக்கநாயக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போதே ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் எங்களிடம் பிடித்துத் தந்தார்கள் அவர்களை விசாரித்து விட்டு விடுதலை செய்து விட்டோம் என்றும் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிவ்ரியினால் தெல்லிப்பழையில் இடம்பெற்ற போராட்டத்தில் யாரும் குழப்பம் விளைவிக்கவில்லை என்றும் பொலிஸார் யாரையும் கைது செய்யவில்லை என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் அவர்களினால் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே விடயம் தொடர்பில் தமக்கு எதுமே தெரியாது என்று நளுவிக் கொண்ட பொலிஸார் ஊடகவியலாளர்களினால் இன்றைய சந்திப்பில் அது தொடர்பான ஆதாரங்கள் காட்டப்பட்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலையில் உண்மையினை பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர்.