குமுதினி நினைவுத்தூபி, வலி சுமந்த வரலாறு அதை உளி கொண்டு உடைத்துவிட முடியாது – ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன்

ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மக்களின் துன்பதுயரங்கள்,வாழ்க்கையிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள வளங்களின் தன்மை போன்றவற்றை அறியாது அரசியலில் நுழைந்தவர்கள் உண்மைக்குப் புறம்பாக பொறுப்பற்றவிதமாக அறிக்கைகளை வெளியிட்டு வருவது கவலை தருகின்றது. நெடுந்தீவு மக்களின் வாழ்வியலையும், வளங்கள் சார்ந்த சவால்களையும் வாழ்ந்து அனுபவித்த அந்த மண்ணின் மைந்தன் நான்.

அவர்கள் நடுக்கடலில் அநாதரவாக விடப்பட்டபோது, அடுத்தவேளை உணவுக்காக அந்தரித்துத் திரிந்தபோது அவர்களுடன் வாழ்ந்தவன். அவர்களின் வாழ்வில் இன்று ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சிக்காக எமது தலைவர் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சேர்ந்து பாடுபட்டு உழைத்தவன். அரசியல் சுய இலாபங்களுக்காக இன்று நேற்று நெடுந்தீவுக்குப் படகு ஏறிச் சென்றவன் இல்லை. எனது மண்ணுக்கும், எனது மக்களுக்கும் எது பயன் தருமோ, எது நலன் தருமோ அவற்றையே எனதும் எமது கட்சியினதும் இலட்சியமாக எண்ணிச் செயலாற்றி வந்திருக்கின்றேன்.

அன்மையில் நெடுந்தீவு தொடர்பாக வெளியாகிய செய்திகள் என்னை மிகவும் கவலைகொள்ளச் செய்தது. மாகாண சபை உறுப்பினர் ஒருவரால், மாகாண சபைத் தேர்தலின் பின்னர் நெடுந்தீவு பிரதேசத்தில் மக்களை பழிவாங்கும் எண்ணத்துடன் எமது பிரதேச சபையினர் குடி நீருக்காக மக்களுக்கு உப்புநீரை வழங்குவதாக பத்திரிகைகளில் செய்தியை வெளியிட்டுள்ளார்.

குறித்த மாகாணசபை உறுப்பினர் நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தும் அப்பிரதேசத்தில் நடப்பதை அறியாதளவுக்கு உள்ளார் என்ற விடயம் மனவருத்தத்தை தருவதாகவே காணப்படுகின்றது. அதிலிருந்து நெடுந்தீவுக்கும் இவர்களுக்குமான தொடர்பு எவ்வளவு இடைவெளியானது என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது.

நெடுந்தீவு பிரதேசத்தில் பெருமளவான இடங்களில் உப்புநீர் காணப்படுகின்ற நிலமையில் மக்களுக்கு எந்தவகையில் குடிநீருக்கு நன்னீரை வழங்க முடியுமோ அவ்வாறான வகையில் நெடுந்தீவு பிரதேச சபை குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதனை அப்பிரதேச மக்களும் நன்கறிவார். இச்செய்தியினை சுயலாப அரசியலுக்காக வெளியிட்டவர்களும் அறிவர் என்பதுடன்,

இதேவேளை நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் குமுதினி நினைவுப் தூபியை நெடுந்தீவு பிரதேச சபையும், கடற்படையினரும் சேர்ந்து அழிப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மேற்படி குமுதினி நினைவு தூபியானது புனர்நிர்மாணம் செய்யப்படுவதற்கே நெடுந்தீவு பிரதேச சபையில் உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்படுவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

போராட்ட வரலாற்றில் நெடுந்தீவு மக்களின் இரத்தம் இந்துமா கடலில் சிந்திய இரணமிக்க சம்பவத்தின் நினைவுத்தூபி அதுவாகும். நெடுந்தீவு மக்களின் மனங்களிலுள்ள வேதனைகளின் பிரதிபலிப்பாக விளங்கி வருகின்ற மேற்படி தூபியினை இடிக்கவோ, அகற்றவோ எந்தப் பொழுதிலும் எவருக்கும் நாம் இடமளிக்கப்போவதில்லை. உரிமைப் போராட்டத்தில் நெடுந்தீவு மக்கள் கொடுத்த ஈடுசெய்யமுடியாத இழப்பின் அடையாளமாக அந்தத்தூபி நிமிர்ந்து நிற்கின்றது. அதைப் புனரமைக்கவே நாங்கள் விரும்புகின்றோம். அதற்காகவே ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதைப் புரிந்து கொள்ளாமல், போக்கற்ற விதத்தில் அரசியல் நடத்துவதற்காகவும் புன்பட்ட மக்களின் மனத்தை கிளறி விடுவதற்காகவும் சில தீய அரசியல்வாதிகளும், அவர்களுக்கு துதி பாடும் ஊடகங்களும் செயற்படுகின்றன.

இவ்வாறான செயல்களுக்கு பதிலாக மக்களோடு மக்களாக தமது பிரதேசங்களில் வாழ்ந்தால் மக்களின் துன்பதுயரங்கள் மற்றும் அபிலாசைகளை அறிந்து கொள்ள முடியும். கடந்த காலத்திலும் எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் நெடுந்தீவு மக்களையும் முரண்பட வைக்கும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டதும் பின்னர் சதிகாரர்கள் தோற்றுப்போனதும். நெடுந்தீவு மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டதையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

சில காலங்களுக்கு முன்னர்.யாழ்.நல்லூர் பகுதியிலுள்ள சங்கிலியன் மன்னனின் சிலையினை யாழ்.மாநகர சபை புனர்நிர்மாணம் செய்யும் போது ஈ.பி.டி.பியினால் நிர்வாகிக்கும் யாழ்.மாநகர சபை சங்கிலியன் சிலையினை அகற்றி அவ்விடத்தில் புத்தர்சிலையினை நிர்மாணிக்கப்போகின்றது என்று சில ஊடகங்கள் தவறான செய்தியை பிரசுரித்தமையும் தற்போது சங்கிலியன் மன்னனின் சிலை மிகச் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதையும், அதே இடத்தில் தற்போதும் கம்பீரமாக தோற்றமளிப்பதையும் அனைத்து மக்களும் அறிவார்கள். எம்மீது அவதூறு பரப்பிய ஊடகங்களும், அரசியல்வாதிகளும் வெட்கித் தலைகுணிந்திருப்பார்கள். என்பதையும் ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

ஆகவே எதையும் ஆராய்ந்து பார்க்காமல், உண்மையை தெரிந்து கொள்ள முற்படாமல் சுய இலாபங்களுக்காக அரசியல்வாதிகளும், வியாபார பரபரப்புக்காக ஊடகங்களும் மக்களை குழப்பும் செயற்பாட்டை தவிர்த்துக் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

நீங்கள் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களைத் தேடித் திரிபவர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமோ, எப்போதும் மக்களுடன் வாழ்பவர்கள். தேர்தல் முடிவுகளை கணக்கில் கொண்டு நாம் முடிவுகளை எடுப்பவர்களில்லை. எமக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும். நீங்கள் இப்போது தொட்டுப்பார்ப்பதை, இருபது வருடங்களுக்கு முன்னரே தோளில் தூக்கிச் சுமந்தவர்கள் நாங்கள் என்பதையும் தோழமையோடு தெரிவித்துக் கொள்கின்றேன். என்றுள்ளது