யாழ் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.
கடந்த 20ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளால், ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டதுடன், அவரது மனைவி எஸ்.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் வட்டுக்கோட்டை பொலிஸார் காட்டிய அசமந்த போக்குக் காரணமாக, குற்றப்புலனாய்வு விசாரணையில் விசேடத்துவம் பெற்ற, மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றொஹான் மகேஷ், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும்படி வடமாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டார்.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டு, 18 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கத்திகளும், மண்வெட்டியும் மீட்கப்பட்டது.
சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் முன்விரோதம் காரணமாக திட்டமிடப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து, ஐந்து சந்தேகநபர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவிட்டார்.