குடும்பநல உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

மட்டுவில் கிழக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் குடும்பநல உத்தியோகஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்டான்லி நிசாந்தினி (வயது 27) என்பவரே, அவரது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என சாவகச்சேரி பொலிஸார் இன்று புதன்கிழமை (13) தெரிவித்தனர்.

மேற்படி உத்தியோகஸ்தர், மேலதிக பணிக்காக நுணாவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (12) பணிக்குச் சென்றுவிட்டு மதியமளவில், விடுமுறை பெற்று தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கண்டியிலிருந்து அவரது கணவர் தங்குமிடத்திற்கு வந்தவேளை, மேற்படி குடும்பநல உத்தியோகஸ்தர் பேச்சுமூச்சற்ற நிலையில் கீழே வீழ்ந்து கிடந்துள்ளார்.

மனைவி மயக்கமுற்றிருப்பதாக எண்ணிய கணவன், உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளார். இருந்தும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (12) இரவு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor