குடாநாட்டில் மீண்டும் குடும்பப் பதிவில் சீருடையினர்

army_slயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், காணிகளின் விவரங்களை இராணுவச் சீருடையில் வருவோர் வீடு வீடாகச் சென்று திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

அத்துடன் குடும்பப் படங்களும் படையினரால் எடுக்கப்பட்டன. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்ததுடன் நாடாளுமன்றில் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து இந்தக் குடும்பப்பதிவு நடவடிக்கைகளைப் படையினர் நிறுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் குடும்பப் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்டத்தின் கரையோர கிராமங்களான குருநகர், பாசையூர் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை காலை முதல் படையினர் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

படையினர் இராணுவச் சீருடையுடன் வந்து, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, அடையாள அட்டை இலக்கம், அவர்களின் தொழில் விபரங்கள் என்பவற்றுடன் காணியின் அளவு, சொந்த வீடு, வாடகை வீடு பற்றிய விபரங்களையும் திரட்டியுள்ளனர்.

இதனை விட 2000 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது மக்கள் தங்கியிருந்த இடங்கள் தொடர்பான விபரங்களையும் இராணுவத்தினர் திரட்டியுள்ளனர்.
கடந்த வாரம் மயிலிட்டி மக்கள் இடம்பெயர்ந்து உடுவிலில் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று படையினர் விபரங்களைத் திரட்டினர்.

யாழ். குடாநாட்டில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முனைப்பு பெற்றுள்ள நிலையில், இராணுவத்தினர் பொதுமக்களிடம் காணி தொடர்பான விபரங்களைக் கோருவது மக்கள் பகுதியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.