குடாநாட்டில் இனந்தெரியாத கும்பலொன்று மாணவரை போதைக்குள் தள்ளிவிடும் சதி அம்பலம்!

banparak-pothaivasthu-pakkuயாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை போதைப் பாவனைக்குள் தள்ளிச் சீரழிக்கும் திட்டமிட்ட சதி அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள்களில் வரும் குழுவினர் நன்கு திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்டறிந்து உள்ளனர்.

போதைப்பொருள் கலந்த பாக்குப் போன்ற ஒரு பதார்த்தம் பாடசாலை நேரங்களில் மாணவர்கள் மத்தியில் இந்தக் குழுவால் விநியோகிக்கப்படுகிறது. இதனை மெல்லும் பாடசாலை மாணவர்கள் சிலர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து இது பற்றிய விசாரணைகள் ஆரம்பமாகின.

யாழ். புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 ஐச் சேர்ந்த மாணவர்கள் போதையூட்டிய பாக்குகள் பயன்படுத்தியமை தொடர்பில் பாடசாலை அதிபரால் எச்சரிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவர் நீதிமன்றினால் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளரிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர் குழுவொன்று பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள்களை விநியோகிக்கின்றது. 14 வயது தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களையே இலக்காகக் கொண்டு இந்தப் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது.

பாடசாலை ஆரம்பமாகும் நேரத்தில் அல்லது மதிய வேளையில் பாடசாலை வளவினுள் இந்தப் போதைப் பொருள்கள் வெளியிலிருந்து எறியப்படுகின்றன. தனியார் கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றிலும் இந்தக் குழுவினர் இலவசமாகப் போதைப் பொருளை விநியோகிக்கின்றனர்.

இந்தப் போதைப் பொருள்களைப் பாவிக்கும் மாணவர்கள் மயங்கி விழுவதுடன் போதை ஏறியவர்களாகத் தள்ளாடுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு தயங்குகின்றனர். முறைப்பாடுகள் செய்தால் தமக்கு ஏதாவது உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதாலேயே அவர்கள் அவ்வாறு தயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தின் நகர்ப்புறப் பாடசாலைகள் மாத்திரமல்ல, கிராமப்புறப் பாடசாலை மாணவர்களும் இந்தப் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளைச் சீரழிப்பதற்காக நன்கு திட்டமிட்டு இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகப் புத்திஜீவிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.